Wednesday, February 06, 2013

பந்திகொள்ளும் டோண்டூ இராகவன் அவர்கள்!


யோசித்துப் பார்க்கிறேன்.எட்டு ஆண்டுகளுக்கு முன் வலைப் பதிவை அண்மித்து அதற்குள் இயங்கியங்கியபோது தமிழ்மணத்தால் அறிமுகமானவர் இந்த டோண்டு இராகவன் அவர்கள்.பெரும்பாலும் தமிழ்ச் சமுதயாமானது படு பிற்போக்கான சமுதாயமாகவிருப்பதும்,அதன் சிந்தனை யோட்டமானது ஆளும் அதிகாரத்துக்கிசைவானதாகவும்,  இருக்கின்றது.இந்தச் சமுதாயமானது தனது முரண்பாடுகளுக்கொப்ப வளர்வுறுதால் அதுள் நிலவும் பொருளாதார வளர்ச்சிக்கொப்பவேதாம் மனிதர்களின் உள-அறிவு வளர்ச்சியும் சமூகவுணர்வாகவும்-பண்பாடாகவும் பிரதிபலிக்கும்.எமது சமூக வாழ்நிலையின் குறை நிலைகள் நமக்குள் பிரதிபலிப்பவை.

எனவே,ஒரு சக மனிதரைப் புரிந்துகொள்வதற்கு மேலே கூறியவொரு சமூக-உளவிற் பார்வை அவசியமானது.டோண்டு இராகவன் பெரும் பாலும் இந்தச் சமுதயாத்தின் அனைத்துக் குழப்பகரமான முரண்பாடுகளோடும் ஒட்டியுறவாடுபவர்.இதே சமுதாயத்தின் சாக்கடையிற்றாம் நாம் அனைவரும் உருவாகிறோம்.இதுள், பெரிதாகச் சொல்லி , நீட்டி முடக்கத் தேவையில்லை.நாம் அனைவருமே குறைபாடுடையவர்கள்.

டோண்டு அவர்களை,நான் கண்ட இந்த எட்டு ஆண்டுகளில் அவர் சளைக்காது பல பக்கங்களை நிறைத்து எழுதிக்கொண்டிருந்தார்.என்னோடு அதிகமாக டொச்சு மொழியிலுரையாடுவார்.அவருக்கு மொழியொரு தடை அல்ல.இது, குறித்து நான் சில வேளைகளில் ஆச்சரியப்படுவதுண்டு!

2005-2006 கள் ஒரு பொற்காலமாக எழுத்துக்கும்-உணர்வுக்கும் இடைவெளியே புரியமுடியாதளவுக்கு ஒருவரதெழுத்தை மற்றவர், வாசித்து விமர்சிக்கும் உறவு நிலையாய் மாறியிருந்தது.அதற்குத் தமிழ்மணம் பாரிய பங்களிப்பையுஞ் செய்தது.





எது குறித்தும் டோண்டு அவர்கள் எழுதுவார்.நாம், எப்படியும் விமர்சிப்போம்,ஏசுவோம்-சண்டை பிடிப்போம்.எனினும்,இறுதியில் "டோண்டு ஐயா"  என்று, புன்னகைத்து விலத்திச் செல்வோம்.

மிகவும்,தப்புத் தப்பாகவெல்லாம் சமூக வளர்ச்சியைப் புரிந்து வைத்திருப்பார்.பிற்போக்குச் சிந்தனைகளைத் தனது அனுபவத்தின் தொடர்ச்சியாகவும் சந்தர்ப்பத்தில் நியாயப்படுத்தியும் விடுவார்.

சோவையும்-மோடியையும் பெருமிதத்தோடு போற்றுவார்.அப்படிப் போற்றும்போது,குஜராத்தில் நடாத்தப்பட்ட முஸ்லீம்களுக் கெதிரான படு கொலைகளையும் நியாயப்படுத்துவதை அவர் புரிய மறுத்தார்.என்றுபோதும்,அவரோடு உரையாடத்தக்கதாகவே இருந்தது.எதிராளியை வசைச் சொல்லால் அடித்து நொருக்கியதை நான் அறியேன்.மிகவும்,குதர்க்கமாகச் சமூகச் சிந்தனையை அவர் புரிய முனைந்திருப்பினும் அவரது தொழில்முறை-திறன்சார் அனுபவங்களும் எழுத்தும்,அறிவுறத்தல்களும் மிகவும் நேர்த்தியானது-பிரயோசனமிக்கது.சம்பவங்களைக் கோர்வையாக்கித் தனது தொழில் அனுபவங்களையும்,தான் கண்ட மனிதர்களையும் மிக அழகாக-நேர்த்தியாக எழுத்துக்குள் கொணர்வார்.இஃது, பாலு மகேந்திராவின் கமராக் கண்ணுக்கொத்த காட்சிப்படுத்திலாக எமது மனத்திலும்-விழிகளுக்கு முன்னும் விரிந்துகொள்ளும்.

தனது,ஒவ்வொரு நகர்வையும்-தான் அநுபவிக்கும் தருணத்தையெல்லாம் பகிர்ந்துகொள்ளும் திரு.இராகவன் அவர்கள், வலைப்பதிவில் நம்மைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் எழுத்துக்களையெல்லாம் முன்வைப்பார்.அதை மூடி மறைத்து-நசிந்தபடி அவர் வைப்பதில்லை.தனக்குப்பட்டதை"எடுத்தேன்-கவிழ்த்தேன்"என்று போட்டுடைத்து எழுதுவார்.இதன் தாக்கத்தில் நாம் அவரோடு பல்வேறு பார்வையின் தெரிவில் சண்டை போடுவோம்.ஆனால்,இறுதியில் நம்மை அரவணைத்து,மனம் நோகமால் திரும்பிச் செல்ல வைப்பார்!இதனால்,அவரோடு முட்டிய வலி தெரியாது விலத்திப்போகும் பதில்களையே முன் தள்ளுவார்.

நினைத்துப் பார்க்கிறேன்.

இந்த மனிதரைக் கடந்த மாதம்வரை முக நூலில் தேடியலைந்திருக்கிறேன்.வலைப் பதிவில் சக்கை போடு போட்ட மனிதரை முகநூலில் காணாமலிருப்பதையெட்டு ஆச்சரியப்பட்டேன்.ஆனால்,இன்று வாசித்த செய்தி அவர் இந்த உயிர்வாழ்வில் இன்னொரு கட்டத்தை அடைந்து விட்டாரென.

இந்தப் பௌதிக வாழ்வில், பெருந்துயர் நாம் பிறக்கும்போதே நம்மோடு தோழமைகொண்டு நிழலாகத் தொடர்கிறது.அதைத் துரத்த முடியாது.இது, "இயற்கையின் நியதி" என்று முன்னோர்கள் சொல்வதைப் புரிந்திருந்தாலும், நம்மோடு மல்லுக்கட்டி-உறவாடி,எழுதி,அநுபவத்தைப் பகிர்ந்து தன்னையும்,இந்த உலகத்தையும் விட்டுப் பிரிக்க முடியாது தொடர்ந்தியங்கிய மனிதர் நம்மோடு, இப்போதில்லையென்றுணரும்போது மனதுக்குக் கஷ்டமாகவே இருக்கிறது.

நீண்டகால எழுத்தியகத்தின் மூலம் அறிந்த மனிதர் டோண்டு.இஸ்ரேலையெல்லாம் தான் ஆதரிப்பதாகச் சொல்லி உண்மை பேசும் மனிதர்.தனது நேர்மைக்குப் பாதகமில்லாமல் எழுதுபவர்.அஃது,பெரும் பகுதி மனிதர்களுக்கெதிரானதாவிருந்தாலும் தனது கருத்தை நேரடியாவும்-உண்மையாகவும் முன் வைப்பார்.

நாம்,எல்லோருமே குறைபாடுடையவர்களென மேலே சொன்னேன்.

"நல்லதும்-கெட்டதும்"  இந்தச் சமூக வாழ்நிலையின் வழியே நம்மை ஆட்டுவிப்பது.

டோண்டு அவர்களுக்கோ அன்றி எனக்கோ இருவேறுபட்ட உலகமில்லை!

நமது வாழ்நிலையில், அதுசார்ந்த சமுதாயக் கட்டமைப்பில் வர்க்கமாகப் பிளவுண்டுபோன பொருளாதார-மனித விருப்புகளும், வர்க்க அரசியலும் அதுசார்ந்த செயற்பாடுகளுமேதாம் நமக்குள் பிரதிபலிப்பது.

அந்த வகையில் டோண்டு அவாகள், தன் வாழ்நிலைக்கொப்பத் தன் சமூகவுணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அவரது,இழப்பு வலிக்கிறது.

கடந்த காலத்தை வெறுமையோடு திரும்பிப்பார்க்க வைக்கும் அவரது இன்மை, என்னையும் அவரது இழப்பையிட்டு எதையாவது உணர்வதைக் குறித்து எழுதெனத் தூண்ட, இதைப் பதிந்தேன்.

அன்னாரின் இழப்பையிட்டு வருந்தும் அவர்தம் குடும்பத்தவர்களுக்கும், மற்றும், அனைவருக்கும் எனது ஆழ்ந்த அநுதாபத்தைப் பகிர்ந்து,உங்களோடு நானும் அவரது இழப்பின் வலியில் பந்திகொள்கிறேன்.

Goodbye Dondu!
Der Tod ist wie ein Horizont,dieser ist nichts anderes als die Grenze unserer Wahrnehmung.Wenn wir um einen Menschen trauern, freuen sich andere,
ihn hinter der Grenze wieder zu sehen.

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
06.02.2013

No comments:

ஈரான் : இசுரேல் மீதான பதிலடி

  ஈரான் : இஸ்ரேல் நேட்டோ தலைமையில் ஈரான் மீது படை எடுக்க நிச்சியம் ஈரான் , ஈராக் அல்ல .   சூடான் —பாலஸ்தீனத்திலிருந்து உலகு தழுவி உக்கிரைன் ...